சுவாரசிய சினிமா - Parched ( HINDI )



இந்த படத்தை குறித்து பேசும் முன் நம் இந்திய சமுகத்தில் பெண்களுக்கான வெளியை குறித்து முதலில் பேச வேண்டியதுள்ளது .இந்தியா  மொழியாலும் ,இனத்தாலும் பல சமுக மக்களை உள்ளடக்கிய நாடு .உலகிலேயே அதிக அளவில் பெண் கடவுள் உள்ள தேசம் .அதற்க்கு சற்றும் குறையாமல் பாலியல் வன்கொடுமை ,பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனோபாவம் ,கல்வியில் கட்டுப்பாடு ,மறுக்கப்படும் அடிப்படை  உரிமைகள் இப்படி அடக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பிரச்சனை உள்ள தேசமும் கூட .

நீங்கள் சொல்வது எல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்பொழுது எல்லாம் அப்படி கிடையாது என்று சொல்ல உங்கள் நா துடிக்கும் .அப்படி துடித்தால் நிச்சயம் நீங்கள் கிராமப்புற இந்தியாவை இன்னும் பார்க்கவில்லை என்று அர்த்தம் கொள்க .அடிப்படை சுகாதாரம் ,சாலை வசதி ,ஒருவேளை உண்பதே பெரும் பாடாய் உள்ள கிராமங்கள் இந்தியாவில் இலட்சக்கணக்கில் உள்ளது .பின் பெண் விடுதலை குறித்து எங்கே பேசுவது ?

அடுத்து ஆண்களின் பார்வையில் பெண் என்பவள் ,இன்னமும் தனக்கு கீழே தான் ,என்ற மனோபாவம் கொஞ்சமும் மாறவில்லை .பெண் எத்தனை உயர் பதவியை அடைந்தாலும் அவள் கணவனுக்கும் ,குடும்பத்துக்கும் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத நியதி இந்த சமுகத்தில் ஆழப் பதிந்துள்ளது .

பொதுவெளியில் பெண்ணியம் பேசும் மெத்த படித்த பெண்களுக்கே மேல சொன்ன நிலைமை தான் என்றால் மற்றவர்களை குறித்து நாம் யோசிக்கவே வேண்டாம் .அவர்கள் வாழ்வு நிச்சயம் அடிமைத்தனத்தில் புதைந்துப்போய் எப்பொழுது உயிர்த்தேழுவோம் என்று துடித்துக் கொண்டே இருக்கிறது .இது தான் ஒவ்வொரு சாமானிய இந்திய பெண்ணின் மனநிலை .

இன்றும் கூட வேலைக்கு செல்லும்  நகர்ப்புற பெண்கள் முழுமையான விடுதலை பெறவில்லை .குடும்பம் தவிர்த்து  வேறு எதையும் சிந்திப்பதே பாவம் என்ற அளவுக்கு இந்த சமுகம் அவர்கள் மேல் கொடுரமான அடக்குமுறையை விதித்துள்ளது .சாலையில் ,பேருந்துகளில் ,இரயில்களில் எந்த இந்திய பெண்ணின் தலைகளும் இன்னும் நிமிரவே இல்லை .ஒரு வித அச்சத்துடனே பொழுதை கடத்துகின்றனர் .

ரயில் தாமதம் ,வீட்டுக்கு வர நேரமாகும் என்று வெகு இயல்பாக ஆண்கள் சொல்லும் அதே காரணத்தை எந்த இந்திய பெண்ணும் அவ்வளவு எளிதாக வீட்டில் சொல்லமுடியாது .வீட்டிற்க்கு தலைதெறிக்க ஓடும் அந்த கணம் குறித்து வார்த்தைகளில் விவரிக்க முடியாது .அத்தனை படபடப்பு தொற்றிக்கொள்ளும் அவர்களுக்கு .

ஒரு பெண் வீட்டுக்கு வர நேரம் ஆக ஆக உடனடியாக அவளின் நடத்தை மேல் சந்தேகம் கொள்ள துணிகிறது இந்த சமுகம் .அவளின் உணர்வு ,விருப்பு ,தேவை , குறித்து யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் .ஆனால் அவள் அனைவருக்காகவும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் .இல்லையென்றால் குடும்ப வளர்ப்பில் குறை சொல்வார்கள் .

இப்படி பாரம்பரியம் ,குடும்ப மரியாதை இன்னும் பல காரணங்களை அவர்கள் மேல் திணித்து திணித்து உயிர் உள்ள பிணமாக அவர்களை இந்த உலகில் நடமாட வைத்து இருக்கிறோம் .இது தான் இத்தனை ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு கிடைத்த விடுதலை .

படம் குறித்து  எதுவும் பேசவில்லை இல்லையா ?நல்ல படம் பாருங்கள் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?