எது உலக சினிமா ?

தெரிந்த இயக்குனர் ஒருவர் ,உலக சினிமாவை சிலாகித்து பேசிக் கொண்டு இருந்தார் .அவர் கூறிய அத்தனை திரைப்படங்களும் நமக்கும் பரிச்சியமானவை தான் . தமிழ் சினிமாவில் உலக சினிமாக்களின்  தரத்தை ஒருப்போதும் எதிர்ப்பார்க்க முடியாது என்றும் ,இங்கு குப்பைகளே கொண்டாடப்படுகிறது  என்றும் வசைப்பாடியப்படியே இருந்தார் .

அவர் கூறிய ஒட்டுமொத்த உலக சினிமாக்களின் வசூலை ஒரே ஒரு வணிக சினிமா முறியடிக்கிறது என்றால் ,மக்களிடையே உலக சினிமாக்கள் கொண்டு சேர்க்கப்படவில்லை அல்லது மக்கள் அதனை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்றே பொருள் கொள்வோம் .

நாம் அடிக்கடி சொல்வது போல் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல .அது ஒரு கொண்டாட்டம் .கலவையான உணர்வு பயணம் .மக்கள் திரையை வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை ,திரையினுள் பயணம் புரிகிறார்கள் .புது உலகம் ,புது மனிதர்கள் ,அவர்களின் பிரச்சனையை இவர்களின் சொந்த பிரச்சனையாக கருதி "உச்" கொட்டுகிறார்கள் .நாயகன் ஜெயித்தால் கரகோஷம் எழுப்புகிறார்கள் .தோற்றால் கவலை கொள்கிறார்கள் .ஆக சினிமா என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல மக்களின் உயிர்சொல்லாக இருந்து வருகிறது .

சரி உலக சினிமா என்பது என்ன ?                                                                                    
நமக்கு சில சொற்கள் கேட்டு மட்டும் பழகியதால் அதனின் பொருளை அறிய நாம் விரும்புவது இல்லை .உதாரணதிற்க்கு தீவிரவாதி என்ற சொல் நமக்கு கெட்ட வார்த்தையாகவே பழக்கப்பட்டுவிட்டது.தீவிரமாய் வாதம் புரிபவர்களை அவ்வாறு அழைப்போம் .ஆனால் நாம் எவ்வாறு பொருள் கொள்கிறோம் அந்த சொல்லை கேட்ட மாத்திரத்தில் துப்பாக்கி ஏந்தி கொலை செய்பவர்கள் என  உருவகப்படுத்திக் கொள்கிறோம் .

அதை போலவே உலக சினிமா என்ற உடனே எதோ அதி அற்புதமான உன்னத காவியம் ,அறிவிலி மக்களுக்கு புரியாது .மேதாவிகளுக்கு மட்டுமே அவை சொந்தமானவை என்பது போலவே ஒரு மாய தோற்றம் இங்கு நிலவி வருகிறது .குறியீடுகள் மூலமும் ,கடினமான மொழி நடையிலும் ,மொத்தத்தில் உற்று நோக்கினால் மட்டுமே புரியும் காவியமாக அது இருக்குமேயானால் அதை நீங்கள் திரைப்படங்கள் என்று எடுத்துக் கொள்ளாதிர்கள்.அவை அனைத்தும் இயக்குனர் தனக்கு இவ்வளவு விஷய ஞானம் உள்ளது ,என்பதை பறைசாற்ற எடுக்கப்பட்டது என்று அர்த்தம் கொள்க .

உண்மையில் சினிமா சாமானியனுக்கானது .அவன் கொண்டாடி மகிழவே சினிமா .சாதாரண மக்களுக்கு உங்களால் ஒரு படத்தை புரிய வைக்க முடியவில்லை என்றால் ,பிறகு எப்படி அது உலக சினிமா ஆகும் ?அமெரிக்கா ஆயிரம் படம் எடுக்கிறது, ஆனால் சில நூறு படங்களை மட்டும் தான் சர்வதேச அளவில் வெளியிடுகிறது .
காரணம் ஆராயுங்கள் .அந்த சில நூறு படங்கள் தான் உலக மக்கள் அனைவருக்கும் புரிகிறது .மற்றவை அனைத்தும் அந்தந்த மண் சார்ந்த ,அவர்களின் கலாச்சாரம் சார்ந்த திரைப்படம் .அவை நமக்கு தேவை இல்லாதது .

சினிமா சமூக கலாச்சாரத்தின் வெளிப்பாடு .மக்களின் இயலாமையை திரையில் நடிக்கும் நாயகன் செய்வதின் மூலம் மக்கள் திருப்தி அடைகிறார்கள் .அவர்கள் எதிர்ப்பார்ப்பது உலக சினிமா அல்ல தன்னை மறக்கடிக்கும் நல்ல சினிமா .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?