சிறந்த கதை கிடைக்க சமூகத்திடம் கையேந்துங்கள் !



நம் தினமும் சந்திக்கும் சமுகத்தை வெகு இயல்பாய் கடந்து விடுகிறோம் .ஒவ்வொரு தனி மனிதனுக்கு பின்னும் ஒரு சமுக நெருக்கடி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும் .எந்த தனி மனிதனின் வாழ்வியல் குறித்தும், நாம் சிந்திப்பது இல்லை .பின் கதை எங்கே தோன்றும் ?

திரைக்கு எழுதுவது பெரும்பாலும் கற்பனையான உலகமாக இருந்தாலும்கூட ,நாம் வாழும் சமுகத்தில் இருந்தே அதை பெற முடியும் .Fantasy வகை கதைகளில் கூட மனித உணர்வே பிரதானமாக இருக்கும் .உங்கள்  உணர்வுகளை  சீண்டி பார்க்கும் பொழுதே அந்த படைப்பு வெற்றி அடைகிறது .

அப்படி உணர்வுபெறும் வகையில் கதாப்பாத்திரங்களை பெற நீங்கள் சமூகத்தையே சார்ந்து இருக்க வேண்டும் .இதுவரை வெளிவந்த அத்தனை சிறந்த படைப்பும் ,நீங்கள் கவனிக்க தவறிய சமுகத்தின் வெளிப்பாடே .நாம் நம் உலகை தவிர  வேறு ஒரு உலகம் இருப்பதை மறந்து வாழ்கிறோம் .

ஒரு சிறந்த படைப்பு  எளிய மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் பொழுதே முழுமை அடைகிறது .ஏனென்றால் 100க்கு 90 சதவிகிதம் எளிய மனிதர்களால் நிரம்பியது இந்த உலகு .ஒரு எளியவன் வலியவன் ஆகுவதையே நாம் பெரிதும் விரும்புகிறோம் .காரணம் நாம் அனைவரும் எளியவர்களே .

தனி மனிதன் இந்த அரசு கட்டமைப்பை எதிர்க்கும் பொழுது உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் எளியவனின் குரல் உங்களையும் மீறி வெளிவந்து திரையை நோக்கி கூச்சலிட வைக்கிறது .உங்களால் முடியாத ஒன்றை திரையில் ஒருவன் நிகழ்த்தும் பொழுது ஆர்ப்பாட்டம் ,கொண்டாட்டம் என மகிழ்ச்சி கொள்கிறீர்கள் .

தோல்வியில் தத்தளிக்கும் ஒரு எளிய மனிதன்  கடின உழைப்பால் வாழ்வின் பெரும் உயரத்தை எட்டும் பொழுது உங்களால் உங்கள் உணர்வை வெளிக்கொணராமல் இருக்க முடிவதில்லை .காரணம் நீங்களும் அந்த உயரத்தை அடைய நித்தம் நித்தம் போராடிக்கொண்டிருக்கும் எளியவனே .

ஒரு எளியவனின் வாழ்வே இந்த சமுகம் .அவனே இந்த சமுகத்தை தொடர்ந்து இயக்கிக் கொண்டு இருக்கிறான் .ஆக அவன் வாழ்வை எதிரொலிக்கும் படைப்புகளே ஆக சிறந்த படைப்பாய் மக்களால் இதுவரை கொண்டாடப்படுகிறது .

உங்களின் இயக்கம் முழுமை பெற மக்களை கவனியுங்கள் .அவர்களிடம் இருந்து கதைகளை பெற முயலுங்கள் .மக்கள் மிக நுணுக்கமான உணர்வுகளை கூட  வெகு சாதாரணமாக வெளிப்படுத்துவார்கள் .திறன் வாய்ந்த நடிகர்களால் கூட பிரதிபலிக்க முடியாத நுண்ணிய முகபாவங்களை அவர்களிடம் இருந்து பெற முடியும் .

ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வும் போராட்டமானதே .அதை தினமும் அவன் எதிர்க்கொள்ளும் திறனே இந்த சமுகத்தில்  அவனை உயிர்ப்புடன்  வைத்து இருக்கிறது .அந்த வாழ்வியல் போராட்டத்தை திரைக்கதை அமைத்து படமாக்க முயலுங்கள் .

ஆயிரம் ஆயிரமாய் உயிர்ப்புடன் உலாவும் நிஜ கதாப்பாத்திரங்களை தவற விட்டு கற்பனையான கதாப்பாத்திரங்களுக்கு உயிர்க் கொடுக்க முனைந்து கொண்டு இருக்கிறோம் .

மீண்டும் அழுத்தமாகவே இதை சொல்கிறேன் ஒரு சிறந்த படைப்பு என்பது நாம் வாழும் சமுகத்தில் நமக்கு நெருக்கமான மனிதர்களின் இயல்புகளை கொண்டு வெளிவரும் படங்களே இங்கு கொண்டாடப் படுகிறது .மற்ற படங்களும் வரும் ஆனால் உங்கள் மனதை அவை ஒருப்பொழுதும் நெருங்க முடியாது .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?