சுவாரசிய சினிமா - The Song Of Sparrows
ஐரோப்பாவின் புகழ்ப் பெற்ற இயக்குனர் ,திரைக்கதை ஆசிரியர் Bela Balaz தன்னுடைய The Theory of the film நூலில் இப்படி குறிப்பிடுகிறார் .
"ஏராளமான நடிகர்களையோ ,பிரம்மாண்டமான அரங்கத்தையோ ,பெரிய கூட்டத்தையோ வைத்து எடுப்பதின் மூலம் படத்தின் பிரம்மாண்ட தன்மையை உருவாக்க முடியாது ,மாறாக படத்தின் கருத்துப் பொருள் அல்லது கதாநாயகனின் தனித்தன்மை மூலமாகத்தான் படத்தின் பிரம்மாண்ட தன்மையை உருவாக்க முடியும் ".
அவர் கூறிய அத்தனையையும் ஈரான் சினிமா பின்பற்றுகிறது .தொழில் முறை நடிகர்கள் கிடையாது .போதுமான நிதி வசதி கிடையாது .எடுத்த படங்களை திரையிட திரையரங்குகள் கிடையாது .இருக்கும் பொருளை வைத்து சிறந்ததை எடுக்கக் கற்று கொண்டனர் .
உலகம் கொண்டாடும் படைப்புகளை எடுத்தக் கொண்டே வருகின்றனர் .மொழி கடந்து ,இனம் கடந்து ஈரானிய சினிமா தனக்கான பாதையை உருவாக்கி கொண்டுள்ளது .பொருளாதார ரீதியாக தத்தளித்தாலும் தங்களால் இயன்றதை பதிவு செய்துக் கொண்டே வருகின்றனர் .
இந்த படமும் உங்களை நிச்சயம் ஏமாற்றாது .சூழ்நிலைகள் தான் மனிதனின் உணர்வை தூண்டும் .அந்த உணர்வுகளை கொஞ்சமும் உண்மை குறையாமல் படமாக்குவது என்பது அசாத்தியமான விஷயம் .ஆனால் இயக்குனர் மஜித் மஜிதிக்கு சாதராணமாக வருகிறது .
நெருப்புகோழி பண்ணையில் பணிபுரியும் நாயகன் கவனக்குறைவால் ஒரு கோழி அங்கிருந்து தப்பி செல்கிறது அதனால் வேலை இழக்கிறான் .மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவிக்கு உணவு அளிக்க வேண்டும் அதனால் கிடைக்கும் வேலை எல்லாம் செய்கிறான் .
நாயகனின் தவிப்பு ஒவ்வொரு காட்சியிலும் உங்களை தொண்டை அடைக்க செய்யும் .இயக்குனரின் உழைப்பு இந்த படம் முழுக்க நம்மை ஆச்சரியப் படுத்த வைக்கும் .அடுத்து இந்த படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் குறித்து சொல்ல வேண்டும் .
யாருமே நடிக்கவில்லை .அறிவாக பேசவில்லை .பெரிய மனித தனம் துளியும் பார்க்க முடியாது .அவர்கள் சிறுவர்களாகவே இந்த படத்தில் இருக்கின்றனர் .எப்படி அவர்களுக்கு மட்டும் இது சாத்தியமாகிறது என்று தெரியவில்லை .
அஞ்சலி முதல் தங்கமீன்கள் வரை சிறுவர்களை அவர்கள் உலகில் உலாவ விடவில்லை .இயக்குனர் கடினப்பட்டு நடிப்பை வாங்கி இருப்பார் அவர்களாக கொடுக்கவில்லை .இது தான் சர்வதேச தரத்துக்கும் நமக்கும் உள்ள இடைவெளி .
படம் வேகமாக நகராது .ஆனால் அழுத்தமான காட்சிகள் இருப்பதால் நம்மை உறைய வைக்கும்.இது கொண்டாட்ட சினிமா கிடையாது ஆனால் படம் முடியும் தருவாயில் ஒரு மெல்லிய உணர்வு உங்கள் நெஞ்சில் புரையோடும் .பிரம்மாண்ட அரங்கு நல்ல சினிமாவை உருவாக்கமல் போகலாம் .ஆனால் நல்ல சினிமாவிற்கு பல பிரம்மாண்ட அரங்குகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளது .
Comments
Post a Comment