சுவாரசிய சினிமா - THE GREAT DICTATOR
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் நூறாண்டு கழித்தும் வரலாறு இருவர் பற்றி பேசிக் கொண்டே இருக்கும் ஒன்று அடால்ப் ஹிட்லர் மற்றொருவர் சார்லி சாப்ளின் .இருவருமே ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் .இருவருமே உலகம் அறிந்தவர்கள் .ஹிட்லர் அழித்தார் .சாப்ளின் படைத்தார் .
அமெரிக்கா ,பிரிட்டன் உட்பட வல்லாதிக்க நாடுகளே ஹிட்லரை கண்டு அஞ்சி கொண்டு இருந்த நேரம் .1940 அக்டோபர் 15 முதல் காட்சி The Great Dictator -ஐ பார்த்தவர்கள் வாய் அடைத்து போயினர் .ஹிட்லரை நூறு முறை தூக்கில் தொங்க விட்டு இருந்தாலும் அவ்வளவு வேதனைப்பட்டு இருக்க மாட்டார் .
ஒரு மாபெரும் பிம்பத்தை ,நாஜி படைத்தலைவனை ,உலகத்தை தன் ராணுவத்தால் மிரள வைத்த ஹிட்லரை இத்தனை தைரியமாக பகடி செய்யும் துணிச்சல் ஒரு காமெடி நடிகருக்கு எப்படி வந்தது ?ஆம் அத்தனை காலமும் சாப்ளின் காமெடி தான் செய்துக் கொண்டு இருந்தார் .வசனமே இல்லாமல் pantomime வகை நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார் .
ஹிட்லரை கொடுரனாக காட்டி இருந்தால் கூட நாஜிகள் மகிழ்ச்சிக் கொண்டு இருப்பார்கள் .மக்கள் ஹிட்லர் மேல் வைத்த இருந்த அதி பயங்கர பிம்பத்தை தரையில் போட்டு மிதித்து இருப்பார் சாப்ளின் .ஹிட்லேரே இந்த படத்தை பார்த்ததாக சொல்கிறார்கள் ,அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை .ஒருவேளை பார்த்து இருந்தால் சாப்ளினை அழைத்து நாஜிகளின் உயர்ந்த விருதை கொடுத்து இருப்பார் .
ஒரு படைப்பு காலம் கடந்து நிற்பதற்கு சில காரணங்கள் வேண்டும் .அதில் மிக முக்கிய காரணமாக கருதப்படுவது அந்த படைப்பு மனதில் ஏற்ப்படுத்தும் தாக்கம் .நீங்கள் பத்து ஆண்டு கழித்தும் ஒரு நிகழ்வை மனதில் சுமந்து கொண்டு இருக்கிறீர் என்றால் அந்த நிகழ்வு எந்த அளவு உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்க வேண்டும் ? இந்த காரணங்கள் தான் படைப்புக்கு அதி முக்கியம் .ஒரு தரமான படைப்பு உங்களை படுத்தி எடுக்க வேண்டும் .
சாப்ளின் தான் ஒரு காமெடி நடிகர் அல்ல என்பதை இந்த படைப்பின் மூலம் உலகம் அறிய செய்தார் .அதை விட மனிதம் குறித்தும் ,மாந்த நேயம் குறித்தும் சாப்ளின் கொண்டுள்ள சிந்தனை அனைவரையும் நெகிழ செய்தது .இந்த உலகில் மனிதம் தவிர்த்து வேறு எதுவும் உயர்ந்தது அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருப்பார் .
இந்த படத்தின் இறுதி உரை மிகவும் பிரபலமானது .ஒரு வேளை இந்த படம் பார்த்து முடித்த பிறகு சக மனிதன் மேல் நேசம் பிறக்குமேயானால் அது தான் இந்த படைப்பின் வெற்றி .சினிமா இருக்கும் வரை சாப்ளினும் இருப்பார் .
Comments
Post a Comment