முதல் வரி முதல் முழுக்கதை வரை !
காரல் மார்க்சின் கூற்றுப்படி "தேவையே உற்பத்தியின் தாய் ".மனித குலம் தோன்றிய நாட்தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு உற்பத்தியும் தேவையின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. அந்த உற்பத்தி தேவையை நிறைவு செய்யும் . தேவை முழுமையடையும் பொழுது உற்பத்தி தானாக நின்று விடும்.
நம்மிடம் பேசும் பலருக்கும் புரியாத விஷயம் எப்படி ஒரு முழு நீள திரைக்கதையை உருவாக்குவது ? 50 விதமான ஒன் லைன் இருக்கிறது ,ஆனால் முழுக் கதையாக எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை .கதை எதோ ஒரு இடத்தில் நகராமல் நிற்கிறது இப்படி சிலர் .இன்னும் பலருக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும் .ஆனால் எதைப் பற்றி எழுதுவது என்று தெரியாமல் விழிப்போம் .
விவாதம் ,தொடர் உரையாடல் ,பல படங்களின் மேற்கோள் ,என அனைத்தும் இருந்தும் ஒரே ஒரு காட்சியை கூட முழுமையாக எழுத முடியாமல் தவிப்போம் .உங்கள் வேகம் ஒரே நொடியில் பூஜ்ஜியத்திற்கு வந்து விடும் .
சரி முன்னர் சொன்னது போல் உங்கள் கதையின் தேவை என்ன என்று சிந்தியுங்கள் .உற்பத்தி தானாக பெருகும் .ஆம் ஒரு கரு உங்களுக்குள் உருவாகி இருக்கும் ,அது முழுமை பெற வேண்டும் என்றால் அந்த கருவின் தேவை என்ன என்று சிந்தியுங்கள் .
யாராலும் எடுத்துவுடன் ஒரு முழு திரைக்கதையை அமைத்து விட முடியாது .முதலில் ஒரு வரி தோன்றும் .அது தான் உங்கள் கதை .அந்த வரி வெகு சாதாரணமாக இருக்கலாம் .அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காதீர்கள் .
உங்கள் மனதுக்குள் தோன்றிய கதை ஏற்கனவே வந்தது போலவே இருக்கும் .இதற்க்கு முன் அனைவரும் எடுத்தது போலவே இருக்கும் .மற்றவர்களிடம் பகிரும் பொழுது அவர்கள் வெகு சாதாரணமாக, மொக்கையாக இருக்கிறது என்று உங்களை பலவீனப்படுத்துவர்கள் .
அதை எல்லாம் நீங்கள் தாண்டி வந்தால் மட்டுமே ஒரு முழுமையான திரைக்கதையை அமைக்க முடியும் .என்னிடம் நிறைய நபர்கள் கேட்கும் கேள்வி .சாதாரண ஒரு கதைக்கருவை ரசிக்கும்படி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று .
அவர்களிடம் கூறும் ஒரே பதில் நீங்கள் முதலில் அந்த கதைக்கருவை ரசிக்க வேண்டும் .நீங்களே உங்கள் கதையை ரசிக்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி நீங்கள் எதிர்ப்பார்க்க முடியும் ?
ஒரு கதை ஒரு வரியில் இருந்து எப்படி ஒரு முழுக்கதையாக மாறுகிறது ?முன்னர் சொன்ன அதே பதில் தான் உங்கள் கதையின் தேவையை பெருக்குங்கள் ,அதன் வெளிப்பாடாய் கதை புயல் வேகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகரும் .
உங்கள் கதை நாயகன் ஒரு இக்கட்டான பணநெருக்கடியில் சிக்கி கொள்கிறான் .அதிலிருந்து அவன் மீள வேண்டும் .இது தான் கதை .இதை முழுமையடைய செய்ய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் நாயகனின் இயல்புகள் என்னவென்று உருவாக்குங்கள் .
அவனின் தனித்தன்மை என்ன ? பிரச்சனையை எதிர்க்கொள்ளும் திறன் ,அவனின் குடும்ப சூழல் ,அவனின் தினசரி நடவடிக்கை,அவனின் நண்பர்கள் ,தெரிந்தவர்கள் ,அவன் வசிக்கும் பகுதி ,அவனின் காதல் என அத்தனையும் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.
ஆனால் இவை அத்தனையும் திரையில் வர வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை .பின் எதற்கு இவை எல்லாம் என்றால் ?நாயகனை பற்றிய இந்த குறிப்புகள் தான் அவன் செயலின் வெளிப்பாடாய் அமையும் .
இப்பொழுது நாயகனின் தேவை என்ன என்று யோசியுங்கள் .தேவை பணம் தான் .அதை திருட போகிறானா ? யாரிடமாவது கடன் வாங்க போகிறானா ?அல்லது ஒரு சிக்கலில் இருந்து தப்பித்து இன்னொரு சிக்கலில் சிக்கி கொள்ள போகிறானா என்பது எல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .
இப்படி உங்கள் கதை விரிந்துக் கொண்டே போகும் .இரண்டு மணி நேரம் நீங்கள் கூறும் பொய்யை மக்கள் நம்ப வேண்டும் .அப்படி அவர்கள் நம்ப வேண்டும் என்றால் காட்சிகளில் நியாப்படுத்துதல் வேண்டும் .சரியான காரண ,காரணியங்களோடு உங்கள் காட்சி அமைப்புகள் கட்டமைக்கப்பட்ட வேண்டும் .
முதல் பாதி தேவையை அதிகரியுங்கள் .இரண்டாம் பாதியில் தேவைக்கான விடையை சொல்லுங்கள் .ஆனால் இவை அனைத்தும் சரியான திரைக்கதை அமைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகும் .
Comments
Post a Comment