உங்கள் முதல் படம் வெற்றி பெறுமா ?
பட்ஜெட்டில் நாற்பது சதவிகிதம் film முழுங்கி விடும் .அதனால் புதுமுகங்களை நடிக்க வைக்க தயங்கி நாடகங்களில் தேர்ச்சிப் பெற்ற நடிகர்களையே இயக்குனர்கள் நடிக்க வைத்தனர் .உண்மையில் வசனத்தை ஒப்பிக்க வைத்தனர் .
இன்று அறிவியலின் அசூர வளர்ச்சியால் சினிமா என்னும் அற்புத கலை வெகுஜன மக்களிடமும் சேர்ந்துள்ளது .யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது .ஆனால் இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் உண்மையில் இல்லை .
முதல் தவறு சரியான திட்டமிடல் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் செல்வது .நீங்கள் எவ்வளவு திறமையான நபராக இருந்தாலும் ஸ்பாட்டில் திட்டமிடாத எதையும் செய்ய முடியாது .அங்கே அனைவரும் உங்கள் எண்ண ஓட்டத்தோடு நிச்சயம் ஒத்துப் போக மாட்டார்கள் .அதனால் முன்னரே திட்டமிடுவது ஸ்பாட்டில் நேர செலவை குறைக்கும் .
அடுத்து பயிற்சி இல்லாத நடிகரை நடிக்க வைப்பது .சிறந்த இயக்குனரின் தகுதி என்பது தனக்கு வேண்டியதை நடிகரிடம் இருந்து பெறும் வரை திருப்தி அடையாமல் இருப்பது தான் .அதற்க்கு முறையே நீங்கள் அவருக்கு பயிற்சி கொடுத்து இருக்க வேண்டும் .இல்லையென்றால் உங்களை நீங்களே சமரசப்படுத்திக் கொண்டு காட்சியை முடித்து வைக்க நேரிடும் .
சினிமா மொழி முற்றிலும் வேறானது .சிறந்த கதைகள் தோற்றது உண்டு .சிறந்த திரைக்கதை தோற்றதாக நாம் எங்கும் காண முடியாது .அதனால் Visual cheating நிறைந்த கதைக்களமாக தேர்ந்து எடுங்கள் .இல்லை நான் எடுப்பது தான் சினிமா என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீங்கள் எடுத்ததை நீங்கள் மட்டுமே பார்க்க வேண்டியது தான் .ஏனென்றால் நம் படைப்பு மக்களுக்கானது. வலிய அவர்களிடம் நாம் எதையும் திணிக்க முடியாது .
சரி படம் எடுத்தாயிற்று .அடுத்து ?
வியாபாரம் .இங்கு தான் சினிமா தன் கோரமுகத்தை உங்களுக்கு காட்டும் .ஒட்டுமொத்த சினிமாவும் ஒரு சில நபர்களின் பிடியில் உள்ளதால் அவர்களை தாண்டியே நீங்கள் செல்ல வேண்டும் .இங்கே நீங்கள் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் .உங்களை ஒரு ஆளாக கூட பொருட்படுத்த மாட்டார்கள் .
ஆனால் ஒன்றை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் .முதலீடு என்பது திரும்ப பெறுவதற்கு தான் .அதை பெற்று தரக்கூடிய அளவில் உங்கள் படம் இருக்கிறதா ? சிறந்த படைப்பு என்றைக்கும் தோற்றதாக வரலாறு இல்லை .கால தாமதம் ஏற்படலாம் ஆனால் வென்றாக வேண்டிய படைப்பு வென்றே தீரும் .
Comments
Post a Comment