Location முக்கியம் அமைச்சரே !!!



ஜெர்மனியில் இருந்து  இணையம் வழியாக நம்மிடம் திரைக்கதை பயிலும் நண்பர்ஒருவர் , கதை தயாராக இருப்பதாகவும் ,விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்  போகதாகவும் சொன்னார் .கதைக்களம் முழுக்க முழுக்க ஐரோப்பாவில் நடப்பது போலவும் ஒரு நல்ல கிராமத்து  கதை என்றார் .நமக்கு விளங்கவில்லை ஒரு வேளை ஐரோப்பியர்களை வைத்து எடுக்கப் போகிறாரா என்ற குழப்பதில் ,என்ன மாதிரியான கதை என்று கேட்டால் ஒரு பருத்திவீரன் போல வைத்துக்கொள்ளுங்கள் என்றார் .

அந்த மாதிரியான கதைக்களத்தை எப்படி அங்கே எடுப்பீர்கள் என்றால் ?இங்கேயும் கூட கிராமங்கள் உள்ளன ,மேட்ச் செய்துக் கொள்ளலாம் என்றார் .மேலும் திரைக்கதை வலுவாக இருந்தால் போதாதா என்றார் .

நிச்சயம் போதாது .கதைநாயகனை விட முதன்மை நாயகன் நாம் படத்தின் பின்னணி காட்சிகள் தான் .உயிரோட்டமுள்ள பின்னணி காட்சிகள் தான் ஒரு காட்சிக்கு உயிர் தருகிறது .நம்மிடம் கேள்வி எழலாம் நடிகர்கள் தானே நடிக்க போகிறார்கள் ,பின்னால் என்ன இருந்தால் என்ன ?எது நடந்தால் என்ன ?பிறகு எதற்கு நாம் லொகேஷன் தேடுகிறோம் ?

நாடகங்கள் தொடங்கிய காலம் தொட்டு பின்னணி காட்சிக்கு முக்கியத்துவம்  தரப்படுகின்றன .உதாரணமாக மணிரத்னம் படங்களில் வரும் ரயில்நிலைய காட்சிகளை கவனியுங்கள், அத்தனை உயிர் இருக்கும் .நம் திரையில் வெறும் நடிகர்களை மட்டுமே பார்ப்பது இல்லை .நம்மை அறியாமல் மூளை காட்சியின் பின்னணியையும் பதிவு செய்கிறது .

நீங்களே புகைப்படம் எடுக்கும் பொழுது கூட , எதற்கு பின்னணியில் தாஜ்மஹாலையும் ,தஞ்சை பெரிய கோவிலையும் தெரியும்படி எடுக்குறீர்கள் ?நீங்கள் அங்கே தான் எடுத்தீர்கள் என்பதற்க்கான சான்று .அந்த படத்தை பார்ப்பவர்களிடம்  சொல்ல வேண்டியது இல்லை அது எங்கே எடுக்கப்பட்டது என்று .அது தான் பின்னணி காட்சியின் பலம் .

Lunch Box படத்தின் பலமே அதன் உயிருள்ள பின்னணி காட்சி அமைப்புகள் தான் .இல்லையென்றால் வெறும் இரண்டு கதாப்பாத்திரத்தை வைத்து படம் எடுக்க முடியுமா ?தமிழில் வெளிவந்த குக்கூ திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் படத்தின் திரைக்கதை சில இடங்களில் சோர்வு தட்டினாலும் படம் நெடுக்க உயிருள்ள பின்னணி காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும் .

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் 80% வெற்றி அதன் பின்னணி காட்சி அமைப்பாலேயே உறுதி செய்யப்பட்டது .ஒரு இடத்தில கூட செல்போன் கோபுரமோ ,கேபிள் வயரோ ,இன்றைய நவீனத்தின் தடையமே இல்லாமல் எடுக்கப்பட்டதால் ,மக்களும் 80களுக்கு சுலபமாக பயணம் செய்தார்கள் .மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நம் மூளையானது அனைத்தையும் உண்மை ,பொய் என்று நம்மை அறியாமல் தீர்மானிக்கும் ஆற்றல் வாய்ந்தது .

செட்டுகளுக்குள் எடுக்கப்படும் படங்களை மக்கள் பெரிதும் கொண்டாடுவது இல்லை .இயக்குனர் ஹரி எடுக்கும் படங்களுக்கும் ,வெற்றிமாறனின் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் .நடிகர் தனுஷ் இருவரின் படங்களிலும் நடித்து உள்ளார் .ஆனால் பொல்லாதவனின் உயிர்ப்பு உள்ள காட்சிகள் நீங்கள் வேங்கையில் பார்க்க முடியுமா ?

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஆக சிறந்த பலமே அவரின் உயிர்ப்புள்ள பின்னணி காட்சி அமைப்பு தான் .பாகுபலிக்கு இத்தனை செலவு செய்தது எதற்காக ?பார்க்கும் நாம் உண்மையில் மகிழ்மதியில் பயணம் செய்ய வேண்டும் .அது பொய்க்கும் பட்சத்தில் படமும் தோற்கும் .

இன்னும் ஆயிரம் உதாரணம் சொல்லலாம் .நாம் அடிக்கடி சொல்வது போல் சினிமா வெறும் காட்சிகளின் தொகுப்பு மட்டும் அல்ல அது ஒரு வாழ்வியல் பயணம் .நம்மை சிரிக்க ,சிந்திக்க ,குதுகலிக்க ,ஆர்ப்பரிக்க ,அழ வைக்க ,ஒட்டு மொத்த உணர்வு பெருக்கில் திளைக்க சினிமாவால் மட்டுமே முடியும் .காட்சி ஊடகம் அதி தீவிரமானது .அற்புதமானது .

மக்கள் திரையை அப்பட்டமாக நம்ப வேண்டும் .அங்கே நடக்கும் அத்தனையும் அவர்களை உலுக்க வேண்டும் .சரியான காரண ,காரணியங்கள் இருந்தால் மட்டுமே இவை அனைத்தும் நடக்கும் .இறுதியாக கடவுளே திரையில் தோன்றினாலும் அவருக்கு புகைபோட்டு மேகங்கள் மீது நடக்க வைத்தால் மட்டுமே மக்கள் நம்புவர்கள் .பின்னணி காட்சியின் வலிமை அதுதான் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?