ஒரு கோடிக்குள் படம் பண்ண முடியுமா ?

ஏன் சினிமாவை நாம் இவ்வளவு நேசிக்கிறோம் ?பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் கலைஞனிடம் நம்மையே ஏன் ஒப்புக் கொடுக்கிறோம் ?.இத்தனை பெரிய ஆர்ப்பரிப்பு ,ஆரவாரம் வேறு எதுக்குமே நாம் கொடுப்பது இல்லையே? அனைத்துக்கும் உச்சமாக சினிமாவை நாம் கருதுவது ஏன் ?

ஏன் என்றால் சினிமா தான் மக்களிடம் சமத்துவத்தை விதைத்தது .சாதிய கட்டுமானங்களை உடைத்து அனைவரையும் ஒரே இருட்டு அறையில் அமர வைத்த பெருமை சினிமாவிற்கே சேரும் .அது மட்டும் அல்ல பார்த்தல் தீட்டு ,தொட்டால் தீட்டு என்ற கொடிய அடக்குமுறைகளை அடித்து நொறுக்கி படித்தவனும் பாமரனும் ,ஏழையும் பணக்காரனும் ,மேல் ஜாதி கீழ் ஜாதி என ஒட்டு மொத்த சமூகமும் இந்த கனவுலகத்தை காண ஓடி வந்தது .

சமுகத்தின் வெளிப்பாடாய் சினிமாவும் ,சினிமாவின் பிரதிப்பலிப்பாய் சமூகமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தே வளர்ந்து வருகிறது .அதனால் தான்  சினிமாவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை .உணர்வு தூண்டுதலின் கருவியாக சினிமா மொழி மக்களால் பார்க்கப்படுகிறது .


அவர்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு அனுபவம் .அது எப்படியாக இருந்தாலும் ஒரு சின்ன சலனத்தை அவர்கள் மனதில் ஏற்ப்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.சிரித்து ,அழுது ,பயந்து ,கோவப்பட்டு என சகலத்தையும் அவர்கள் மனம் விரும்புகிறது .திரையில் வரும் பிம்பத்தை அப்பட்டமாக நம்புகிறார்கள் .அப்படி நம்பும் பட்சத்தில் அந்த திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரமும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .அந்த படமும் வெற்றியடைகிறது .


சரி ஒரு கோடிக்குள் படம் பண்ண முடியுமா ?நிச்சயம் முடியும் .சரி வியாபாரம் பண்ண முடியுமா ? முடியும் .சரியான திட்டமிடல்,திடமான திரைக்கதை அமைப்பு ,தேர்ச்சிப் பெற்ற நடிப்பு ,இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தரமான படைப்பை நாம் வெளிக்கொணரலாம் .

முதலில் நாம் செய்ய வேண்டியது இதுவரை நடைமுறையில் இருக்கும் அத்தனை சினிமா பார்முலாவை தவிருங்கள் .பார்த்த உடன் காதல் ,பத்து பேரை அடிப்பது ,இதை எல்லாம் மக்கள் பல நூறு முறைப் பார்த்து அலுத்துப் போய் விட்டார்கள் .அதனால் இதை அனைத்தையும் தவிறுங்கள் .

பின் கதை எப்படி தான் பண்ணுவது ?கதைக்கா பஞ்சம் ?தெருவில் இறங்கி பாருங்கள் எத்தனை கதைகள் நம்மை சுற்றி இருக்கிறது என .கற்பனையை மிஞ்சும் கதைகள் நிஜத்தில் கொட்டிக் கிடக்கிறது .நாம் தான் அவற்றை தவற விடுகிறோம் .சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்ற  மனிதர்கள் எப்படி மாயம் ஆகிறார்கள் தெரியுமா ?அவர்கள் எங்கே பிறந்தார்கள் ?எப்படி இறந்தார்கள் என தெரியுமா ?

இறந்தவர்களின் உறுப்புகளை தானமாக பெரும் மருத்துவமனைகள், பின் அவற்றை எப்படி வியாபாரம் செய்கிறது?இவர்களுக்குள் இருக்கும் வலைப்பின்னல் என்ன ?அரசியல் என்ன ?.தெரிந்து கொள்ள விருப்பப்பட்டு இருக்கிறோமா ?

கள்ளகாதலுக்காக கணவனையே கொல்ல துணியும் மனைவியின் அந்த ஒரு நிமிட  மன நிலை என்ன மாதிரியாக இருந்து  இருக்கும்? .கொலை ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விடும் .ஆனால் நிஜத்தில் அதற்க்கான திட்டமிடல் அவ்வளவு சுலபமானது அல்ல .

ஒரு கொலையாளியின் வாழ்வு நமக்கு எந்த அளவு தெரியும் ?இப்படி ஏதாவது மக்கள் தினமும் சந்திக்கும் மனிதர்களை குறித்து கதை அமையுங்கள் .திரைக்கதையில் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .புது முக நடிகர்கள் என்றால் முந்தைய நாளே ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள் .ஸ்பாட்டில் நடிப்பை பெற முடியாது .

அடுத்து கதைக்கு  மிக அவசியாமான தேவைகளுக்கு மட்டும் செலவு செய்யுங்கள் .அந்த காட்சியால் தான் உங்கள் படமே அடுத்தக் கட்டத்திற்கு நகரும் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் செலவு செய்யுங்கள் .தேவையற்ற காட்சிகளை ஒருபோதும் எடுக்காதீர்கள் . ஏனென்றால் சினிமாவின்  ஒவ்வொரு நொடியும் பணத்தால் ஆனது .

மக்கள் இந்த மாதிரியான படங்களை ஆதரிப்பார்களா ?மக்கள் படங்களை இரண்டு வகையில் மட்டுமே தரம் பிரித்து வைத்துள்ளனர் .ஒன்று நல்ல படம் ,மற்றொன்று மோசமான படம் .நாம் நல்ல படத்தை பற்றியே சிந்திப்போம் .



Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?